ஈரான் மீது போர் தொடுக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்துள்ள மிரட்டலுக்கு, ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராச்சி கடும் பதிலடி கொடுத்துள்ளார்.

அதாவது ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நீண்டகாலமாக நிலவி வரும் அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் தற்போது போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. “ஒப்பந்தத்திற்கு ஈரான் உடன்படாவிட்டால், போர் தொடுத்து அந்த நாட்டை ஆக்கிரமிப்போம்” என அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் பகிரங்கமாக எச்சரித்திருந்தார்.

டிரம்பின் இந்த மிரட்டலுக்குப் பதிலளிக்கும் வகையில் ஈரான் வெளியுறவு மந்திரி அப்பாஸ் அராச்சி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “கடந்த ஆண்டு நடைபெற்ற 12 நாள் போரின் மூலம் அமெரிக்கா தகுந்த பாடத்தைக் கற்றுக்கொண்டது. ஈரானின் நிலம், வான் அல்லது கடல் எல்லைக்குள் எந்தவொரு ஆக்கிரமிப்பு முயற்சி நடந்தாலும், அதனை முறியடிக்க எங்கள் ஆயுதப் படைகள் முழு வீச்சில் தயாராக உள்ளன. ஈரானின் பாதுகாப்புப் படைகள் உடனடி மற்றும் சக்திவாய்ந்த பதிலடியைத் தரும் என்பதில் சந்தேகம் வேண்டாம் என்று கூறியுள்ளார்.

மேலும், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை குறித்து அவர் குறிப்பிடுகையில், “அணுசக்தி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது ஈரானின் அடிப்படை உரிமை. இந்த உரிமைகள் முழுமையாகப் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்தால் மட்டுமே, அமெரிக்காவுடன் புதிய ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைக்கு நாங்கள் உடன்படுவோம்” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மேலும் ஈரானின் இந்த அதிரடிப் பதிலால் மத்திய கிழக்கு நாடுகளில் மீண்டும் போர் மேகங்கள் சூழத் தொடங்கியுள்ளன.