இங்கிலாந்தின் நார்விச் நகரில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில், ‘சிவப்பு உடை அணிந்த சிறுமியின் ஆவி’ நடமாடுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அங்கு மத குருமார்கள் வரவழைக்கப்பட்டு சிறப்புப் பிரார்த்தனை மற்றும் சுத்திகரிப்பு சடங்குகள் நடத்தப்பட்டன.
அதாவது ‘பிரிசில்லா பேகன் லாட்ஜ்’ (Priscilla Bacon Lodge) என்ற மருத்துவமனையில் தான் இந்த அச்சம் பரவியுள்ளது. இது வாழ்நாளின் இறுதி நாட்களில் இருக்கும் நோயாளிகளுக்கான பராமரிப்பு மையமாகும். இங்கு பணியாற்றும் ஊழியர்கள் பலர், இரவு நேரங்களில் மருத்துவமனை தாழ்வாரங்களில் சிவப்பு நிற உடை அணிந்த ஒரு சிறுமி உலவுவதைக் கண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
ஊழியர்களிடையே நிலவிய இந்த அச்சம் காரணமாக, பலர் தனியாக இரவுப் பணி செய்ய மறுத்துள்ளனர். இந்த சிறுமியின் ஆவி, 1970-களில் இதே வளாகத்தில் இயங்கிய பழைய சிறுவர் மருத்துவமனையில் உயிரிழந்த ஒரு நோயாளியின் ஆவியாக இருக்கலாம் என அங்கிருப்பவர்கள் நம்புகின்றனர்.
ஆவியின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த மருத்துவமனை நிர்வாகம், ‘டெலிவரன்ஸ் மினிஸ்டர்ஸ்’ எனப்படும் ஆவிகளை அகற்றும் சிறப்புப் பாதிரியார்களின் உதவியை நாடியுள்ளது. கசிந்த மின்னஞ்சல் தகவல்களின்படி, தேவாலயங்களில் இருந்து ‘புனித எண்ணெய்’ வரவழைக்கப்பட்டு, மருத்துவமனை வளாகத்தில் எதிர்மறை ஆற்றலை நீக்குவதற்கான சிறப்புச் சடங்குகள் நடத்தப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் இதனை மறுத்த மருத்துவமனை நிர்வாகம், பின்னர் ஊழியர்களின் மன அமைதிக்காக ‘ஆசீர்வாதச் சடங்குகள்’ நடைபெற்றதை ஒப்புக்கொண்டுள்ளது.
இங்கிலாந்தில் இது போன்ற ‘பாராநார்மல்’ நடவடிக்கைகளைக் கையாளத் தேவாலயங்களில் பிரத்யேகப் பயிற்சியாளர்கள் உள்ளனர். இருப்பினும், 1974-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட விதிகளின்படி, இதுபோன்ற சடங்குகளை நடத்துவதற்கு முன்னதாக ஒரு மருத்துவ நிபுணரின் ஆலோசனையைப் பெறுவது கட்டாயமாகும். இது மனநலப் பாதிப்பிற்கும், ஆவி தொடர்பான நம்பிக்கைகளுக்கும் உள்ள வித்தியாசத்தைக் கண்டறிய உதவுகிறது.
மேலும் சமீபத்தில் இந்த பழைய வளாகம் மூடப்பட்டு, புதிய இடத்திற்கு மாற்றப்பட்டது. இதன் திறப்பு விழாவில் மன்னர் சார்லஸ் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், அந்த பழைய கட்டிடத்தில் பணியாற்றிய ஊழியர்களின் மனதில் ‘சிவப்பு உடை சிறுமி’ குறித்த பயம் இன்னும் அகலவில்லை.
