ரஷியா – உக்ரைன் இடையே கடந்த 4 ஆண்டுகளாகப் போர் நீடித்து வரும் நிலையில், முதல்முறையாக உக்ரைனின் நவீன ரோபோ ஒன்று ரஷிய ராணுவ வீரர்கள் மூவரைச் சிறைபிடித்த சம்பவம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ரஷியா ஒருபுறம் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளில் ஆர்வம் காட்டி வந்தாலும், மறுபுறம் உக்ரைன் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்தி வருகிறது. சமீபத்தில் உக்ரைன் பயணிகள் ரயில் மீது ரஷியா நடத்திய டிரோன் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். ரயில் தீப்பற்றி எரிந்ததில் பலர் காயமடைந்தனர். இத்தகைய தீவிரத் தாக்குதல்களை எதிர்கொள்ள உக்ரைன் தற்போது அதிநவீன ‘ரோபோ’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.

‘டிராய்ட் டி.டபிள்யூ-7.62’ (Droid TW-7.62) எனப் பெயரிடப்பட்ட தரைவழிப் போர் ரோபோ ஒன்று, உக்ரைன் வீரர்களின் நேரடித் தொடர்பு இன்றிச் செயல்பட்டு, ரஷிய வீரர்கள் மூவரைச் சிறைபிடித்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதனுடன் இணைக்கப்பட்டுள்ள கணினி உதவியுடன் எதிரிகளைக் கண்டறிந்து, பின்தொடர்ந்து தாக்கும் திறன் கொண்டது. இதில் ‘கே.டி-7.62’ ரக இயந்திரத் துப்பாக்கி பொருத்தப்பட்டுள்ளது. இது இலக்குகளைத் துல்லியமாகக் கணக்கிட்டுச் சுடும் வல்லமை பெற்றது.

இந்த ரோபோக்கள் முன்னின்று போரிடுவதால், உக்ரைன் ராணுவ வீரர்களுக்கான உயிரிழப்பு அபாயம் குறைந்து அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர்.

காயமடைந்த ஒரு ரஷிய வீரர் உட்பட மூவர், இந்த ரோபோவிடம் கைகளை உயர்த்திச் சரணடையும் காட்சிகள் நவீன காலத்துப் போரின் மாற்றத்தை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளன.