பெங்களூரு ஆட்டோ ஓட்டுநர்கள் என்றாலே அதிக கட்டணம், சவாரிக்கு வர மறுப்பது போன்ற புகார்களே பெரும்பாலும் செய்திகளில் வரும். ஆனால், சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் இந்த எதிர்மறை பிம்பத்தை உடைத்துள்ளது.
ராபிடோ மூலம் ஆட்டோ புக் செய்த பயணி ஒருவருக்கு, வங்கி சர்வர் கோளாறு காரணமாக ஒரு முறைக்கு இருமுறை பணம் செலுத்தப்பட்டது.
பயணி அவசரமாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டியிருந்ததால், டிரைவர் அந்தப் பணத்தை பிறகு அனுப்பி வைப்பதாகக் கூறி மொபைல் எண்ணைப் பெற்றுக்கொண்டார்.
அந்தப் பயணி, “இந்தக் காலத்தில் யாரும் பணத்தைத் திருப்பிக் கொடுக்க மாட்டார்கள், இது போனது போனதுதான்” என்று நம்பிக்கையின்றி அங்கிருந்து கிளம்பினார்.
ஆனால், ஆச்சரியப்படும் விதமாக அன்று இரவு 8:30 மணிக்கு அந்த ஆட்டோ ஓட்டுநர் கூடுதல் பணத்தைத் தனது யுபிஐ மூலம் சரியாகத் திருப்பி அனுப்பியுள்ளார்.
அந்த நேர்மையை கண்டு வியந்த பயணி, இந்தச் சம்பவத்தை ரெடிட் தளத்தில் பகிர, அது தற்போது இணையத்தில் பலரின் இதயங்களை வென்று வருகிறது. “குளத்தில் சில அழுக்கு மீன்கள் இருக்கலாம், ஆனால் முத்துகளும் இருக்கத்தான் செய்கின்றன” என்று பயனர்கள் பலரும் அந்த ஓட்டுநரின் நேர்மையைப் பாராட்டி வருகின்றனர்.
அதே சமயம், சில பயனர்கள் தங்கள் கசப்பான அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டாலும், இதுபோன்ற மனிதநேயம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பது மகிழ்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இனி இது போன்ற பணப் பரிவர்த்தனைகளில் சிக்கல் ஏற்படும் போது நாம் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பணம் என்று காட்டினால் உடனடியாக மீண்டும் பணம் அனுப்புவதைத் தவிர்த்து, சிறிது நேரம் காத்திருக்க வேண்டும்.
முன்பின் தெரியாதவர்களுக்குப் பணம் அனுப்பும்போது அவர்களின் UPI ஐடி அல்லது மொபைல் எண்ணை ஸ்கிரீன்ஷாட் எடுத்து வைத்துக்கொள்வது பாதுகாப்பானது.
ஒருவேளை பணம் திரும்பக் கிடைக்கவில்லை என்றால், உங்கள் பேமெண்ட் ஆப் அல்லது NPCI இணையதளத்தில் புகார் அளிப்பதன் மூலம் தீர்வு காணலாம்.
