ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம், சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பொது நிகழ்ச்சியில், டிஜே இசைக்கு அமைதியாக நடனமாடிக் கொண்டிருந்த பெண் ஒருவரை, அங்கிருந்த நபர் ஒருவர் திடீரென பின்னால் இருந்து எட்டி உதைக்கும் வீடியோ வெளியாகி அனைவரையும் அதிர வைத்துள்ளது. அந்தப் பெண் நிலைதடுமாறி கீழே விழுந்த பின்னரும், அங்கிருந்தவர்கள் யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை என்பதுதான் இதில் உச்சக்கட்டக் கொடுமை. மனிதாபிமானமே இல்லாமல் மற்றவர்கள் தொடர்ந்து நடனமாடுவதும், அந்த நபர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதும் வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது.

​இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இணையவாசிகள் பலரும் அந்த நபருக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று ராஜஸ்தான் போலீஸாரை வலியுறுத்தி வருகின்றனர். “அந்தப் பெண் செய்த தவறு என்ன? ஏன் ஒருவரும் தடுக்கவில்லை?” எனப் பலரும் சமூகத்தின் மனசாட்சியை நோக்கிக் கேள்வி எழுப்பி வருகின்றனர். பெண்களுக்குப் பொது இடங்களில் பாதுகாப்பு இல்லை என்பதையும், அநீதி நடக்கும்போது மக்கள் மௌனமாக இருப்பதையும் இந்தச் சம்பவம் அப்பட்டமாகத் தோல் உரித்துக் காட்டியுள்ளது. இன்னும் போலீஸ் தரப்பில் முறையான நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், அந்த நபரைக் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.