ஹைதராபாத்தில் ஜனவரி 26 அன்று தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த ஐந்து வயது சிறுமி, பட்டப் நூல் கழுத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தந்தை வண்டியை ஓட்டிச் செல்ல, முன்னே அமர்ந்திருந்த சிறுமியின் கழுத்தில் காற்றில் பறந்து வந்த ‘மாஞ்சா’ நூல் எதிர்பாராத விதமாகச் சுற்றியுள்ளது.

சிறுமி வலியால் அலறுவதைக் கண்டு தந்தை வண்டியை நிறுத்தியபோது, கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றும் சிகிச்சை பலனின்றி அந்தச் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

தெலுங்கானாவில் இந்த மாதத்தில் மட்டும் மாஞ்சா நூலால் நடக்கும் இரண்டாவது உயிரிழப்பு இதுவாகும். ஏற்கனவே ஜனவரி 14 அன்று உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் இதேபோல் கழுத்து அறுபட்டு உயிரிழந்தார். அரசால் தடை செய்யப்பட்ட ‘சீன மாஞ்சா’ நூல்கள் இன்னும் பயன்பாட்டில் இருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டு மட்டும் தெலுங்கானா முழுவதும் பத்துக்கும் மேற்பட்டோர் இந்த ஆபத்தான நூலால் காயமடைந்துள்ளனர். தற்போது இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.