சீனாவை சேர்ந்த நியூ நா என்ற பெண், தனது கணவர் காவோ ஃபீ மற்றும் அவரது சக ஊழியர் ஹான் ஆகியோருக்கு இடையே இருந்த கள்ளக்காதலை சமூக வலைதளத்தில் அம்பலப்படுத்தியுள்ளார். பத்து ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு, தனது கணவர் வீட்டுப் பணத்தை எடுத்து தனது காதலிக்குத் தங்கம் மற்றும் ஆடைகளை வாங்கித் தந்ததை அறிந்த நியூ நா, ஆத்திரத்தில் ‘டௌயின்’ (சீன டிக்டாக்) பக்கத்தில் அவர்களைக் கடுமையாகச் சாடி பதிவுகளை வெளியிட்டார்.
ஆனால், அந்தப் பதிவுகள் கணவரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாகக் கூறி, நீதிமன்றம் நியூ நா மீது அவதூறு வழக்குத் தொடர்ந்து அவருக்குத் தண்டனை விதித்தது. இதன்படி, அவர் 15 நாட்களுக்குத் தனது கணவரிடம் மன்னிப்பு கேட்கும் வீடியோக்களை வெளியிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
நீதிமன்ற உத்தரவுப்படி நியூ நா மன்னிப்பு கேட்டாலும், அந்த வீடியோக்களை அவர் மிகவும் கிண்டலான முறையில் பதிவிட்டு வருகிறார். தனது கணவரை “நல்ல காதலன்” என்றும், காதலியின் கணவரிடம் உதை வாங்கியதைக் குறிப்பிட்டு “வீரமானவர்” என்றும் அவர் நையாண்டி செய்த வீடியோக்கள் இணையத்தில் பல மில்லியன் பார்வைகளைப் பெற்று வைரலாகின.
இந்தச் சம்பவத்தால் ஒரே வாரத்தில் அவருக்கு லட்சக்கணக்கான ஃபாலோயர்கள் கிடைத்துள்ளனர். தற்போது அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தின் மூலம் பொருட்களை விற்பனை செய்து வருமானமும் ஈட்டி வருகிறார். கணவரின் துரோகத்தால் உடல்நலம் பாதிக்கப்பட்டாலும், மக்களின் ஆதரவு தனக்கு மனவலிமையைத் தருவதாக அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
