ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில், தனிப்பட்ட பகையினால் பெண் மருத்துவர் ஒருவருக்கு ஹெச்.ஐ.வி (HIV) தொற்றுள்ள ரத்தத்தை ஊசி மூலம் செலுத்திய நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தச் சதியின் பின்னணியில் பி. போயா வசுந்தரா என்ற பெண் இருந்துள்ளார்.
வசுந்தராவின் முன்னாள் காதலர், பாதிக்கப்பட்ட மருத்துவரைத் திருமணம் செய்துகொண்டதை ஏற்க முடியாமல், தம்பதியைப் பிரிக்க அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். இதற்காக ஒரு தனியார் மருத்துவமனை செவிலியர் மற்றும் அவரது இரு மகன்களுடன் சேர்ந்து வசுந்தரா திட்டம் தீட்டியுள்ளார்.
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடமிருந்து ஆராய்ச்சி என்ற பெயரில் ஹெச்.ஐ.வி தொற்றுள்ள ரத்தத்தை அவர்கள் சேகரித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த ஜனவரி 9-ம் தேதி வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மருத்துவர் மீது, திட்டமிட்டபடி இருசக்கர வாகனத்தால் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
மருத்துவர் காயமடைந்து விழுந்தபோது, அவருக்கு உதவுவது போல நடித்து வசுந்தரா ஊசி மூலம் அந்த ரத்தத்தைச் செலுத்தியுள்ளார். மருத்துவர் சத்தம் போடவே அவர்கள் தப்பியோடினர். பாதிக்கப்பட்ட பெண் ஒரு மருத்துவர் என்பதால், உடனடியாகத் தேவையான சிகிச்சைகளை மேற்கொண்டார்.
தற்போது அவர் நலமாக உள்ளதாகவும், ஹெச்.ஐ.வி வைரஸ் உடலில் நுழைந்தாலும் அது நீண்ட நாட்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்பதால் பெரிய ஆபத்து ஏதுமில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
