உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டம், அசிம் நகர் காவல் எல்லைக்குட்பட்ட நாக்லியா அகில் கிராமத்தைச் சேர்ந்த ஒரு நபருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர்.

ஒரு மனைவி பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டவர், மற்றொருவர் காதல் மனைவி. ஒரே வீட்டில் வசித்து வந்த இவ்விருவருக்கும் இடையே கணவர் மீது உரிமை கோருவதில் நாள்தோறும் கடும் சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்தப் பிரச்சினை முற்றி காவல் நிலையம் வரை சென்ற நிலையில், போலீசார் இதனைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ளுமாறு கிராமப் பெரியவர்களிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து கூடிய பஞ்சாயத்தில், “யார் பெரியவர்? யார் சிறியவர்?” என்ற சண்டையைத் தவிர்க்கக் கணவருக்கு வினோதமான வாராந்திர அட்டவணை (Time Table) போடப்பட்டது.

அந்த ஒப்பந்தத்தின்படி, வாரத்தின் முதல் மூன்று நாட்களான திங்கள் முதல் புதன் வரை கணவர் முதல் மனைவியுடனும், அடுத்த மூன்று நாட்களான வியாழன் முதல் சனி வரை இரண்டாவது மனைவியுடனும் இருக்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் உச்சக்கட்டமாக, வாரத்தின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை கணவருக்கு ‘விடுமுறை’ அளிக்கப்பட்டு, அன்றைய தினம் அவர் தனது விருப்பப்படி யாரிடம் வேண்டுமானாலும் இருக்கலாம் அல்லது தனிமையில் இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த வினோத உடன்படிக்கையைக் கணவர் மற்றும் இரண்டு மனைவிகளும் ஏற்றுக்கொண்டு எழுத்துப்பூர்வமாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த ‘ரோஸ்டர்’ முறை பஞ்சாயத்துத் தீர்ப்பு, அப்பகுதி மக்களிடையே பெரும் சிரிப்பலையையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.