மத்தியப் பிரதேச மாநிலம் மைஹர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில், குடியரசு தின விழாவின் போது மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேசியப் பண்டிகையை முன்னிட்டு மாணவர்களுக்குச் சிறப்பு உணவு வழங்கப்பட்டது.

ஆனால், அவர்களுக்கு உணவு உண்பதற்குத் தட்டுகளோ அல்லது இலைகளோ வழங்கப்படவில்லை. மாறாக, பழைய புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்களில் இருந்து கிழிக்கப்பட்ட காகிதங்களிலேயே பூரியும் அல்வாவும் பரிமாறப்பட்டுள்ளன.

தரையில் அமர்ந்திருக்கும் சிறுவர்கள் வேறு வழியின்றி, அச்சு மை படிந்த அந்த அசுத்தமான காகிதங்களில் இருந்தே உணவை உண்ணும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

அச்சு இயந்திரங்களில் பயன்படுத்தப்படும் மையில் ஈயம் போன்ற அபாயகரமான வேதிப்பொருட்கள் இருப்பதால், அதன் மேல் சூடான உணவை வைத்து உண்பது விஷத்திற்குச் சமம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

மாணவர்களின் ஆரோக்கியத்தைப் பற்றிக் கவலைப்படாமல் செயல்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பள்ளிக்குக் கல்வித் துறை அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளனர். தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.