வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு இடையே, டெல்லியைச் சேர்ந்த ஒரு இளைஞனின் வெற்றிப் பயணம் பலருக்கு ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது.

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்த இவர், கொரோனா காலத்தில் சரியான வேலை கிடைக்காமல் ஒரு நிதி நிறுவனத்தில் வெறும் 21,000 ரூபாய் சம்பளத்தில் ஆவணங்களைச் சரிபார்க்கும் பணியில் சேர்ந்தார்.

சுமார் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக டெல்லியின் கடும் வெயிலிலும் குளிரிலும் அலைந்து திரிந்த அவருக்கு, மிகக்குறைந்த ஊதிய உயர்வு மட்டுமே கிடைத்தது.

ஒரு மழைக்காலத்தில் ஒரு நல்ல ரெயின்கோட் கூட வாங்க முடியாத நிலையில் கண்ணீருடன் நின்ற அந்தத் தருணம் தான் அவர் வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது.

அன்று ஒரு தணிக்கையாளரின் (CA) அலுவலகத்தில் மழையினால் ஒதுங்கியபோது ஏற்பட்ட உரையாடல் அவர் வாழ்க்கையை மாற்றியது.

அவரது திறமையையும், வங்கி செயல்பாடுகளில் அவருக்கு இருந்த ஆழமான அறிவையும் கவனித்த அந்தத் தணிக்கையாளர், சொந்தமாகத் தொழில் தொடங்க அவருக்கு ஆலோசனை வழங்கினார்.

வாடிக்கையாளர்களுடன் அவருக்கு இருந்த நல்லுறவை முதலீடாகப் பயன்படுத்தி, நிதிச் சேவைகளை வழங்கத் தொடங்கினார். கடின உழைப்பின் பலனாக, ஒரு பழைய வாடிக்கையாளர் மூலம் சுமார் 60 கோடி ரூபாய் மதிப்பிலான டீல் ஒன்றை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்தார்.

இதன் மூலம் அவருக்குக் கிடைத்த தரகுத் தொகை மட்டும் சுமார் 45 முதல் 70 லட்ச ரூபாயாகும்.

இன்று அவர் சொந்தமாக ஒரு நிதி நிறுவனத்தை நடத்தி வருகிறார். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நிதிப் பரிமாற்றங்கள், மருத்துவமனைகள் மற்றும் ஹோட்டல்களை வாங்குதல் மற்றும் விற்றல் போன்ற பெரிய அளவிலான தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்.

முறையான பட்டப்படிப்பு இல்லை என்றாலும், களத்தில் இறங்கிச் செய்த வேலையே தனக்குத் தேவையான அனுபவத்தையும் தொடர்புகளையும் கொடுத்ததாக அவர் கூறுகிறார்.

தங்களைப் போன்ற களப்பணியாளர்கள் தங்களிடம் உள்ள ‘மக்கள் தொடர்பை’யே மிகப்பெரிய சொத்தாகக் கருதி முன்னேற வேண்டும் என அவர் மற்ற இளைஞர்களுக்கும் நம்பிக்கை அளிக்கிறார்.