நாட்டின் 77-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக கேரள மாநிலம் கண்ணூரில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் அம்மாநில தொல்லியல் துறை அமைச்சர் கடனப்பள்ளி ராமச்சந்திரன் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினார்.

மேடையில் அவர் பேசிக்கொண்டிருந்த போதே எதிர்பாராத விதமாக திடீரென மயங்கி விழுந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகள் உடனடியாகச் செயல்பட்டு அமைச்சரைத் தரையில் விழாமல் கைத்தாங்கலாகப் பிடித்துக் கொண்டனர்.

அமைச்சர் சுயநினைவின்றி இருந்ததால் விழா மேடைக்கு அருகே தயார் நிலையில் இருந்த ஆம்புலன்ஸ் மூலம் அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குடியரசு தின விழா மேடையிலேயே அமைச்சர் மயங்கி விழுந்த சம்பவம் கேரள அரசியல் வட்டாரத்திலும் அந்தப் பகுதி மக்களிடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.