ஐபிஎம் நிறுவனத்தில் பணியாற்றும் இயன் கிளிஃபோர்ட் என்ற ஊழியர், கடந்த 15 ஆண்டுகளாக ஒரு நாள் கூட வேலைக்குச் செல்லாமல் சம்பளம் பெற்று வருவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. உடல்நலக் குறைவு காரணமாக 2008-ஆம் ஆண்டு முதல் அவர் விடுப்பில் இருக்கிறார்.
மேலும் நிறுவனத்தின் மருத்துவத் திட்டத்தின் கீழ், வேலை செய்யாமலேயே அவருக்கு ஆண்டுதோறும் சுமார் 54,000 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் பல லட்சங்கள்) சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் படி, அவர் ஓய்வு பெறும் வரை அல்லது குணமடையும் வரை இந்தச் சம்பளம் அவருக்குத் தொடர்ந்து வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், இந்த வினோதக் கதை இங்கே முடிந்துவிடவில்லை. பணவீக்கத்திற்கு ஏற்ப தனது சம்பளம் உயர்த்தப்படவில்லை என்றும், இது ஒரு வகையான ‘பாகுபாடு’ என்றும் கூறி அவர் தனது நிறுவனத்தின் மீதே நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில் 15 ஆண்டுகளாக ஒரு முறை கூட அலுவலகம் வராதவருக்குப் போதிய ஊதியம் வழங்கப்படுவதில்லை என்ற அவரது வாதத்தைக் கேட்டு நீதிமன்றமே அதிர்ச்சியடைந்தது. இறுதியில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அவருக்கு வழங்கப்படுவது தாராளமான சலுகை என்றும், இதில் பாகுபாடு எதுவும் இல்லை என்றும் கூறி அவரது மனுவைத் தள்ளுபடி செய்தார்.
