தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், கூட்டணிகள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக மற்றும் அமமுக இணைந்துள்ள நிலையில், திமுக கூட்டணியில் பாமக இணையக்கூடும் என்ற பேச்சும் அடிபடுகிறது.
இது குறித்து திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “பாஜக அல்லது பாமக இடம்பெறும் எந்தக் கூட்டணியிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெறாது” என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
பாமக குறித்த தங்களது நிலைப்பாடு 14 ஆண்டுகளுக்கு முன்பே எடுக்கப்பட்ட முடிவு என்றும், அதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அவர் உறுதிபடக் கூறினார். தொடர்ந்து அதிமுகவின் தற்போதைய நிலையை எண்ணி தான் கவலைப்படுவதாகத் தெரிவித்த திருமாவளவன், திராவிட இயக்கம் சனாதன சக்திகளின் பிடியில் சிக்கியிருப்பது வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்டார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்துப் பேசுகையில், விஜய் இதுவரை பாஜக-வை வெளிப்படையாக விமர்சிக்கவில்லை என்றும், அவர் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடவே வாய்ப்பு அதிகம் என்றும் தெரிவித்தார்.
மேலும், தேசிய அளவில் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தையும், டெல்லியின் ஆதிக்கத்தைத் தடுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் தனது உரையில் அவர் வலியுறுத்தினார்.
