தமிழகத்தில் நிலவும் போதைப்பொருள் புழக்கம் குறித்து திமுக அரசுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் ராமநாதபுரத்திலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட செய்தியைச் சுட்டிக்காட்டிய அவர், தமிழகத்தை அண்டை நாடுகளுக்கு போதைப்பொருள் கடத்தும் மையமாக திமுக அரசு மாற்றிவிட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், சேலத்தில் திமுக நிர்வாகி ஒருவர் சட்டவிரோத மதுவிற்பனைக்காகக் கைதான சம்பவத்தைக் குறிப்பிட்டு, ஆளுங்கட்சியினரின் ஆதரவோடு இத்தகைய குற்றச்செயல்கள் தடையின்றி நடப்பது வேதனைக்குரியது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
இதனால் மாநிலத்தில் அரங்கேறும் சட்டவிரோதச் செயல்களில் ஆளுங்கட்சி நிர்வாகிகள் நேரடியாகத் தொடர்பு கொண்டிருப்பதால், காவல்துறையினர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குவதாகவும், இது ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்தின் மீதான நம்பிக்கையைச் சிதைப்பதாகவும் தினகரன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்திற்குள் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் எதன் வழியாக ஊடுருவுகின்றன என்பதைக் கண்டறிந்து, கடத்தல் பின்னணியில் இருப்பவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் எஞ்சியிருக்கும் ஆட்சிக் காலத்திலாவது இதுபோன்ற புரையோடிப் போன குற்றங்களைத் தடுத்து நிறுத்தி, தமிழகத்தை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என்றும் அவர் திமுக அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.
