விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே, திருமணமான இரண்டரை மாதத்திலேயே ஆசிரியை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவரது கணவர் மீது தற்கொலைக்குத் தூண்டியதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதாவது நாராயணமூர்த்தி என்பவரின் மகள் பிரியங்கா (30). இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார். இவருக்கும் புதுச்சேரி வில்லியனூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் நடைபெற்றது.
திருமணத்தின்போது பேசப்பட்ட வரதட்சணை தொடர்பாக இரு வீட்டாரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, பிரியங்கா தனது கணவரைப் பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிரியங்கா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
திருமணமாகி இரண்டரை மாதங்களே ஆன நிலையில் பிரியங்கா உயிரிழந்ததால், சட்ட விதிமுறைகளின்படி ஆர்.டி.ஓ. (வருவாய் கோட்டாட்சியர்) இந்த மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தி வருகிறார்.
இதற்கிடையே, பிரியங்காவின் மரணம் குறித்து அவரது தாயார் சுமதி காவல்துறையிடம் அளித்துள்ள புகாரில் திடுக்கிடும் தகவல்களைத் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “திருமணத்தின்போது 10 பவுன் நகை தருவதாக உறுதி அளித்திருந்தோம். ஆனால், சூழ்நிலை காரணமாக 5 பவுன் மட்டுமே வழங்க முடிந்தது. மீதமுள்ள 5 பவுன் நகையைக் கேட்டு என் மகளை அவரது கணவர் தரப்பினர் வற்புறுத்தி வந்தனர்.
குறிப்பாக, என் மகளை ஆபாசமாகப் படம் பிடித்து வைத்திருந்த அவரது கணவர், மீதி நகையைத் தராவிட்டால் அந்தப் படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இந்த மன உளைச்சலாலேயே என் மகள் தற்கொலை செய்துகொண்டார். எனவே, இதற்கு காரணமான கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.”
இப்புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வரதட்சணைக்காக ஆபாசப் படத்தைக் காட்டி கணவரே மிரட்டியதாகத் தாய் புகார் அளித்துள்ளது அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
