அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க-வை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், பா.ஜ.க தலைமையிலான கூட்டணியில் அவர் இணைந்திருப்பது தமிழக அரசியலில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் அமைப்பதே தமது நோக்கம் என்று அவர் தெரிவித்துள்ளார். கூட்டணியில் இணைந்ததைத் தொடர்ந்து, தொகுதிப் பங்கீடு குறித்து ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன.
இதற்கு விளக்கம் அளித்துள்ள டி.டி.வி.தினகரன், அ.ம.மு.க கூட்டணியில் இணையும் முடிவு மட்டுமே தற்போது எடுக்கப்பட்டுள்ளதாகவும், தொகுதிப் பங்கீடு தொடர்பாக இன்னும் பேச்சுவார்த்தைகள் தொடங்கவில்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
எனவே, தொகுதிப் பங்கீடு குறித்து வெளியாகும் செய்திகள் அனைத்தும் உண்மையானவை அல்ல என்றும், அவை ஆதாரமற்றவை என்றும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை, ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிட வேண்டாம் என்றும் தனது அறிக்கையில் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
