தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் களம் அதிரடி மாற்றங்களைக் கண்டு வருகிறது. டி.டி.வி. தினகரன் தலைமையிலான அமமுக, பாஜக – அதிமுக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இன்று அதிகாரப்பூர்வமாக இணைந்தது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து வருகின்றன. ஏற்கனவே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக, பாஜக, பாமக, தமாகா, புதிய நீதிக்கட்சி மற்றும் இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ள நிலையில், தற்போது அமமுகவும் இதில் இணைந்துள்ளது.

கூட்டணியில் இணைந்த டி.டி.வி. தினகரனை வரவேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது ‘எக்ஸ்’ (X) தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: “தீயசக்தி திமுகவின் கொடுங்கோல் ஆட்சியை வீழ்த்தவும், வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், புரட்சித்தலைவி அம்மாவின் பொற்கால ஆட்சியை மீண்டும் அமைத்திடவும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ள மரியாதைக்குரிய டி.டி.வி. தினகரன் அவர்களை அன்போடு வரவேற்று வாழ்த்துகிறேன். மக்கள் நலனை முன்னிறுத்தி நாம் அனைவரும் இணைந்து தமிழகத்தை மீட்போம்.”

எடப்பாடி பழனிசாமியின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்து அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள பதிவில்: “எம்மை மனதார வரவேற்ற அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். அம்மாவின் நல்லாட்சியை மீண்டும் அமைத்திட நாம் அனைவரும் ஒருங்கிணைந்து களப்பணியாற்றுவோம். கடந்த நான்கரை ஆண்டுகளாக இருளில் மூழ்கியிருக்கும் தமிழகத்திற்கு புதிய வெளிச்சம் பாய்ச்சும் வெற்றியைப் படைப்போம்.”

கூட்டணி இறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வரும் 23-ஆம் தேதி மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றுகிறார். இக்கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒரே மேடையில் தோன்றி தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்த உள்ளனர்.

மேலும் தனித்துப் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆகியவற்றுக்கு இடையே, இந்த மெகா கூட்டணி திமுகவுக்கு கடும் சவாலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.