கர்நாடக மாநிலம் ராமநகரா மாவட்டத்தில் மாயமான வாலிபர் ஒருவரின் மரணத்தில் நீடித்த மர்மத்தை விலக்கிய போலீசார், அவரை நண்பர்களே குளத்தில் மூழ்கடித்துக் கொலை செய்த திடுக்கிடும் தகவலை வெளிக்கொண்டு வந்துள்ளனர். மாகடி தாலுகா கல்யாணபுரத்தைச் சேர்ந்த 26 வயதான வினோத் குமார் என்பவர், கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி புத்தாண்டு கொண்டாட்டத்திற்காகத் தனது நண்பர்களுடன் வெளியே சென்றுள்ளார்.

அப்போது மதுவில் கலப்பதற்காக இளநீர் பறிக்க வினோத்தை அவரது நண்பர்கள் கட்டாயப்படுத்தித் தென்னை மரத்தில் ஏறச் சொல்லியுள்ளனர். மரத்தில் ஏறியபோது நிலைதடுமாறி கீழே விழுந்த வினோத்திற்கு முதுகெலும்பில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

காயமடைந்த வினோத்திற்குச் சிகிச்சை அளிக்க லட்சக்கணக்கில் செலவாகும் என அஞ்சிய நண்பர்கள் சுதீப் மற்றும் பிரஜ்வல் ஆகியோர், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்குப் பதிலாகக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

வினோத்தை வீட்டிற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி வாஜரஹள்ளி கிராமத்தில் உள்ள ஒரு குளத்தில் மூழ்கடித்துக் கொலை செய்துள்ளனர். பின்னர் எவருக்கும் சந்தேகம் வராதபடி உடலை வெளியே எடுத்து, பெரிய கல்லைக் கட்டி அருகில் இருந்த ஒரு கிணற்றில் வீசியுள்ளனர். வினோத்தைக் காணவில்லை என அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில், செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்த போலீசார் அவரது நண்பர்களைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.