கோழிக்கோடு கோவிந்தபுரம் பகுதியைச் சேர்ந்த தீபக் என்ற வாலிபர், பேருந்து பயணத்தின் போது பெண் ஒருவரால் பாலியல் புகார் சுமத்தப்பட்டு, அது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலானதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் தற்போது முக்கியத் திருப்பமாக, சம்பந்தப்பட்ட தனியார் பேருந்து ஊழியர்கள் அளித்த வாக்குமூலத்தில், அன்று பேருந்தில் பயணித்த பயணிகள் எவரும் தீபக்கின் நடத்தை குறித்து எந்தப் புகாரும் அளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர். மேலும், பேருந்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், அந்தப் பெண் கூறியது போல எந்தவொரு தவறான செயலும் நடந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.
தீபக்கின் தற்கொலைக்குக் காரணமாகக் கருதப்படும் ஷிம்ஜிதா முஸ்தபா என்ற அந்தப் பெண், தற்போது வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றிருக்கலாம் எனப் போலீசார் சந்தேகிக்கின்றனர். அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்த அந்த 18 விநாடி காணொளி எடிட் செய்யப்பட்டது என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தீபக்கின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், தற்கொலைக்குத் தூண்டியதாக ஷிம்ஜிதா மீது ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சைபர் செல்லின் உதவியுடன் முழுமையான காணொளிக் காட்சிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், இந்தச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மைகளை வெளிக்கொணரத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
