உத்தரப்பிரதேச மாநிலம் பதாவுன் மாவட்டத்தில், தனது இருசக்கர வாகனத்திற்கு காற்று அடிக்க மறுத்த காரணத்திற்காக 7 வயது சிறுவனைத் தாக்கிய காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பில்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பான்ஸ் பரோலியா கிராமத்தில் உள்ள ஒரு பஞ்சர் கடையில், ஆயுஷ் என்ற சிறுவன் தனது தந்தைக்கு உதவியாக அமர்ந்திருந்தபோது, அங்கு வந்த காவலர் விகாஸ் யாதவ் தனது வாகனத்திற்கு காற்று அடிக்குமாறு கூறியுள்ளார்.

 

அதற்கு அந்தச் சிறுவன் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த காவலர், சிறுவனின் கன்னத்தில் ஓங்கி அறைந்ததில் அவன் நிலைகுலைந்து மயங்கி விழுந்துள்ளார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த கிராம மக்கள் அந்த இடத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பதற்றம் நிலவியது.

இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி காவல்துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்தியதையடுத்து, சம்பந்தப்பட்ட காவலரை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.