ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் ஒரு தம்பதியினர் போலி தங்க நகையை நம்பி வாங்கி 8.5 லட்சம் ரூபாயை இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொருளாதார நெருக்கடியில் இருப்பதாகக் கூறி இருவர் இந்தத் தம்பதியை அணுகி, தங்களிடம் இருந்த ஒரு தங்க மாலையை விற்பனை செய்ய முன்வந்துள்ளனர். தம்பதியினர் முன்னெச்சரிக்கையாக அந்த நகையை ஒரு நகைக்கடைக்காரரிடம் காண்பித்து பரிசோதித்தனர்.
அந்த நகைக்கடைக்காரர் மாலையில் இருந்த இரண்டு மணிகளை மட்டும் சோதித்துவிட்டு அது அசல் தங்கம் என்று சான்றளித்தார். அந்த நகையிலுள்ள சில பகுதிகள் மட்டும் அசலாக இருந்ததால், முழு நகையும் தங்கம் என்று நம்பிய தம்பதியினர் 8.5 லட்சம் ரூபாய் கொடுத்து அதனை வாங்கினர்.
மேலும் பணம் கொடுத்த பிறகு நகையை விரிவாகப் பரிசோதித்தபோதுதான், அந்த மாலையின் பெரும்பகுதி போலியானது என்பதும், ஒரு சில மணிகள் மட்டுமே உண்மையான தங்கம் என்பதும் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தம்பதியினர் உடனடியாக காவல்துறையில் புகார் அளித்தனர்.
ஆனால், நீண்ட நாட்களாகியும் காவல்துறையினரிடமிருந்து முறையான பதில் கிடைக்காததால், அவர்கள் தங்கள் குமுறலை சமூக வலைதளமான ரெடிட்டில் பதிவிட்டனர். இந்தச் சம்பவம், முன்பின் தெரியாதவர்களிடம் விலை உயர்ந்த பொருட்களை வாங்கும்போது கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதையும், நகைகளை முழுமையாகப் பரிசோதிக்க வேண்டியதன் அவசியத்தையும் மக்களுக்கு ஒரு பாடமாக உணர்த்தியுள்ளது.
