மும்பை போரிவலி ரயில் நிலையத்தில் காலை நேர நெரிசலில் பயணிகள் சிலர் நடைமேம்பாலத்தைப் பயன்படுத்தாமல், தண்டவாளத்தைக் கடப்பதற்காக நின்றுகொண்டிருந்த ரயில் இன்ஜின் மீது ஆபத்தான முறையில் ஏறிச் சென்ற காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by Lit Memes Mumbai (@litmemesmumbai)

போரிவலி நிலையத்தின் 9-ஆவது நடைமேடையில் நின்றிருந்த அந்த ரயிலின் இன்ஜினை ஒரு தற்காலிகப் பாலமாகப் பயன்படுத்திய பயணிகள், அதன் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்குத் தாவிக் குதித்துச் சென்றனர்.

அப்போது திடீரென ரயில் நகரத் தொடங்கியதும், இன்ஜின் மீது இருந்தவர்கள் பதற்றத்துடன் கீழே குதித்தனர். மும்பையின் பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் நேரத்தைச் சேமிக்கப் பயணிகள் மேற்கொள்ளும் இத்தகைய உயிருக்கு ஆபத்தான முயற்சிகள் குறித்து இணையவாசிகள் கடும் கவலை தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் தானே ரயில் நிலையத்தில் நெரிசல் காரணமாகப் பயணிகள் தண்டவாளத்தில் இறங்கி நடந்தபோது இருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவத்தை நினைவுகூர்ந்துள்ள சமூக ஆர்வலர்கள், ரயில்வே நிர்வாகம் இது போன்ற பாதுகாப்பற்ற செயல்களைத் தடுக்கக் கூடுதல் கண்காணிப்பு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.