பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா (கிராமின்) திட்டம், கிராமப்புறங்களில் சொந்த வீடு இல்லாத ஏழை மக்களின் கனவை நனவாக்க 2029-ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் சமவெளிப் பகுதிகளில் வீடு கட்ட ரூ.1.20 லட்சமும், மலைப்பகுதிகளில் ரூ.1.30 லட்சமும் நிதியுதவியாக வழங்கப்படுகிறது.
இத்துடன் மாநில அரசின் பங்களிப்பாக மேற்கூரை அமைக்க ரூ.50,000 மற்றும் கழிப்பறை கட்ட ரூ.12,000 என கூடுதல் தொகையும் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது. மேலும், 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் 90 நாட்கள் ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பும், தேவைப்பட்டால் ரூ.70,000 வரை வங்கி கடனும் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பதாரர் 18 வயது நிரம்பிய இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும் மற்றும் அவருக்கு இந்தியாவில் எங்கும் சொந்தமாக நிரந்தர வீடு இருக்கக்கூடாது. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், எஸ்சி/எஸ்டி பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், விதவைகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு இதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இருப்பினும், அரசு பணியில் இருப்பவர்கள், மாதம் ரூ.10,000-க்கும் மேல் வருமானம் ஈட்டுபவர்கள், நான்கு சக்கர வாகனங்கள் அல்லது விவசாய நிலங்கள் வைத்திருப்பவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியற்றவர்கள் ஆவர்.
விண்ணப்பிக்க விரும்புவோர் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், வங்கி கணக்கு புத்தகம் மற்றும் தங்களுக்குச் சொந்த வீடு இல்லை என்பதை உறுதிப்படுத்தும் பிரமாணப் பத்திரம் ஆகிய ஆவணங்களைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இந்த ஆவணங்களுடன் அருகிலுள்ள பொது சேவை மையத்திற்குச் சென்றோ அல்லது ஊராட்சி அலுவலகம் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு, தகுதியானவர்கள் பயனாளிகள் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்.
நேரில் செல்ல முடியாதவர்கள் pmayg.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களின் விவரங்களை அளித்து ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தின் நிலையை rhreporting.nic.in என்ற இணையதளத்தில் அவ்வப்போது சரிபார்த்துக் கொள்ளும் வசதியும் உள்ளது. எளிய முறையில் வீடு கட்ட உதவும் இந்தத் திட்டம், கிராமப்புற ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு பாதுகாப்பான குடியிருப்பு வசதியையும் உறுதி செய்கிறது.
