கடந்த ஆண்டு கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகப் (தவெக) பொதுக்கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில், அக்கட்சியின் தலைவர் விஜய் அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் இரண்டாவது கட்டமாக விசாரணையை நிறைவு செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற தவெக பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, ஒன்றரை வயது குழந்தை உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், வழக்கின் விசாரணை சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. ஏற்கனவே அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த் ஆகியோரிடம் சிபிஐ விசாரணை நடத்தியிருந்தது.

இதன் தொடர்ச்சியாக, டில்லி சிபிஐ தலைமையகத்தில் கடந்த ஜனவரி 12-ஆம் தேதி விஜய்யிடம் முதல் கட்ட விசாரணை நடைபெற்றது. இந்நிலையில், நேற்று (ஜனவரி 19) இரண்டாம் கட்ட விசாரணைக்காக அவர் மீண்டும் ஆஜரானார். காலை முதல் சுமார் 6 மணி நேரம் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்குப் பிறகு தவெக நிர்வாகி நிர்மல் குமார் டில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

“இந்தச் சம்பவம் தொடர்பாகத் தேவைப்பட்ட தகவல்களைச் சிபிஐ அதிகாரிகள் எங்கள் தலைவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டனர். இன்றுடன் விசாரணை முடிந்துவிட்டது, அவருக்கு மீண்டும் சம்மன் எதுவும் வழங்கப்படவில்லை. இன்று காலை முதலே தலைவர் விஜய் கைது செய்யப்படலாம் என்றும், குற்றப்பத்திரிகையில் அவர் பெயர் சேர்க்கப்படலாம் என்றும் திட்டமிட்டு வதந்திகள் பரப்பப்படுகின்றன.

இவை அனைத்தும் முற்றிலும் பொய்யானவை. 41 பேரின் மரணத்திற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தான் காரணம் என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அமித் ஷா முன்னிலையிலேயே கூறியிருந்தார். ஆனால், அது குறித்து ஊடகங்கள் கேள்வி எழுப்பவில்லை.” மேலும் விஜய் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படலாம் என சமூக வலைதளங்களில் தகவல் பரவி வரும் நிலையில், கட்சியினர் அதனை மறுத்துள்ளனர். தேவைப்படும் பட்சத்தில் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாகவும் தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.