பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவராக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான நிதின் நபீன் (45) போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று (ஜனவரி 20) காலை 11.30 மணியளவில் முறைப்படி கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்கிறார்.

பாஜக தேசியத் தலைவர் பதவிக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று நடைபெற்றது. இதில் நிதின் நபீனைத் தவிர வேறு யாரும் மனுத் தாக்கல் செய்யவில்லை. அவருக்கு ஆதரவாக 30-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஜே.பி. நட்டாவின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் 14 முதல் கட்சியின் செயல் தலைவராகப் பணியாற்றி வந்த நிதின் நபீன், தற்போது முழுநேரத் தலைவராகிறார்.

பீகார் மாநிலம் ராஞ்சியில் (தற்போது ஜார்க்கண்ட்) 1980-ஆம் ஆண்டு பிறந்தவர் நிதின் நபீன். இவரது தந்தை கிஷோர் பிரசாத் சின்ஹா பாட்னா மேற்கு தொகுதியின் நான்கு முறை எம்.எல்.ஏ-வாக இருந்தவர். தந்தையின் மறைவுக்குப் பிறகு 2006-இல் அரசியல் பயணத்தைத் தொடங்கிய நிதின் நபீன், படிப்படியாகக் கட்சியில் உயர்ந்தார்.

கடந்த  2006-இல் தொடங்கி 2010, 2015, 2020 மற்றும் 2025 எனத் தொடர்ந்து ஐந்து முறை சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று சாதனை படைத்தவர்.  பீகார் மாநில அமைச்சரவையில் சாலை கட்டுமானம், நகர்ப்புற வளர்ச்சி மற்றும் சட்டத்துறை போன்ற முக்கியப் பொறுப்புகளை வகித்த அனுபவம் கொண்டவர். சத்தீஸ்கர் மற்றும் சிக்கிம் மாநிலங்களின் கட்சி மேலிடப் பொறுப்பாளராகச் சிறப்பாகச் செயல்பட்டு தேசிய தலைமையின் கவனத்தை ஈர்த்தவர்.

45 வயதே ஆன நிதின் நபீன், பாஜக வரலாற்றிலேயே மிக இளைய வயதில் தேசியத் தலைவராகும் பெருமையைப் பெறுகிறார். இதற்கு முன்பு 2014-இல் அமித் ஷா தலைவராகப் பொறுப்பேற்ற போது அவருக்கு வயது 49. அவரை விடவும் இளையவரான நிதின் நபீனைத் தலைவராக்கியதன் மூலம், பாஜக தலைமையில் ஒரு பெரிய ‘தலைமுறை மாற்றம்’ ஏற்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். மேலும் அனுபவம் மற்றும் இளமைத் துடிப்புடன் இருக்கும் நிதின் நபீனின் தலைமை, வரும் காலங்களில் நாடு முழுவதும் கட்சியின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.