இந்தி திணிப்புக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் தமிழகத்தில், அரசுப் பேருந்து ஒன்றிலேயே இந்தி மொழி எழுத்துகள் இடம்பெற்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூரில் இயக்கப்பட்ட ஒரு புதிய அரசுப் பேருந்தின் உள்ளே பொருத்தப்பட்டிருந்த எல்.இ.டி (LED) திரையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

பொதுவாகப் புதிய அரசுப் பேருந்துகளில் உள்ள டிஜிட்டல் போர்டுகளில் ‘நல்வரவு’ எனத் தமிழிலும், ‘Welcome’ என ஆங்கிலத்திலும் தான் வாசகங்கள் இடம்பெறும்.

ஆனால், அந்தப் பேருந்தில் ஆங்கிலத்திற்குப் பதிலாக இந்தி மொழியில் ‘வெல்கம்’ எனத் தோன்றியுள்ளது. இதைப் பார்த்த பயணிகள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள், “தமிழக அரசுப் பேருந்தில் இந்தி எதற்கு?” எனக் கேள்வி எழுப்பி சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வைரலாக்கினர்.

இதற்கு விளக்கமளித்த போக்குவரத்துத் துறை அதிகாரிகள், ஏற்கனவே சில பேருந்துகளில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகச் சீன மொழி எழுத்துகள் தோன்றியது போல, இங்கும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்தி எழுத்துகள் தோன்றியதாகத் தெரிவித்துள்ளனர்.