தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள ஆனைக்காடு பகுதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று (ஜன. 18) நடைபெற்ற நீச்சல் போட்டியில், மணிகண்டன் (35) என்ற கூலித் தொழிலாளி நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்தார்.

அப்பகுதியில் உள்ள குளத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பங்கேற்ற மணிகண்டன், இலக்கை நோக்கி நீந்திக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாகக் குளத்தின் அடியிலிருந்த சேற்றில் சிக்கிக் கொண்டார். தனது தந்தை வெற்றி பெற வேண்டும் என்ற ஆவலில் கரையில் நின்றிருந்த அவரது குழந்தைகள் உற்சாகமாக முழக்கமிட்டுக் கொண்டிருந்த நிலையில், மணிகண்டன் நீண்ட நேரமாகத் தண்ணீருக்கு மேல் வராததைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக போட்டியாளர்கள் அவரை மீட்டுக் கரைக்குக் கொண்டு வந்தனர்.

இருப்பினும், அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. உரிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் இன்றிப் போட்டி நடத்தப்பட்டதே இந்த உயிரிழப்புக்குக் காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், பேராவூரணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.