திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள மேலமரவாக்காடு கிராமத்தில், காணும் பொங்கல் விளையாட்டுப் போட்டியின் போது ஏற்பட்ட மோதலில் வாலிபர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். அந்த கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர், மதுபோதையில் தனது நண்பர்களுடன் வந்து போட்டியில் இருந்தவர்களிடம் தகராறு செய்துள்ளார்.
ஊர்மக்கள் அவரை வெளியேற்ற முயன்றபோது, செல்வகுமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அங்கிருந்தவர்களைக் குத்த முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் செல்வகுமாரைத் தடுத்துத் தாக்கியதோடு, அவரிடமிருந்த கத்தியைப் பிடுங்கி அவரது கழுத்திலேயே குத்தினர். இதில் பலத்த காயமடைந்த செல்வகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவருடன் வந்த இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மன்னார்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அரவிந்த்குமார் உட்பட 4 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
