கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அத்தாணி அருகே உள்ள பள்ளிக்கூடப் பையினுள் நாகப்பாம்பு பதுங்கியிருந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அத்தாணி பகுதியைச் சேர்ந்த அப்துல் அஸீஸ் என்பவரது மகன் சிராஜ், அங்குள்ள பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்றுமுன்தினம் பள்ளி முடிந்து மாலை டியூசன் சென்றுவிட்டு வீடு திரும்பிய சிறுவன், தனது புத்தகப் பையை வீட்டில் உள்ள மேஜை மீது வைத்துள்ளார். மறுநாள் காலை வீட்டைச் சுத்தம் செய்தபோது, மேஜை மீதிருந்த பையை எடுத்து ஓரமாக வைத்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாகப் பையினுள் நாகப்பாம்பு ஒன்று சுருண்டு பதுங்கி இருப்பதைக் கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
உடனடியாகச் சிறுவனின் குடும்பத்தினர் அந்தப் பையை வீட்டின் வெளியே வீசிவிட்டு வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் வனத்துறையினர் பாம்புபிடி வீரரான ரின்சாத் என்பவரை வரவழைத்தனர். அவர் புத்தகப் பையினுள் பதுங்கியிருந்த நாகப்பாம்பை லாவகமாகப் பிடித்துச் சாக்கிற்குள் அடைத்தார்.
பின்னர் பிடிபட்ட அந்தப் பாம்பு வனத்துறையினர் முன்னிலையில் பாதுகாப்பாக அருகில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது. பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுவனின் பையிலேயே நாகப்பாம்பு பதுங்கியிருந்ததும், இரவு முழுவதும் அது வீட்டிற்குள்ளேயே இருந்ததும் தெரிந்த நிலையில், சிறுவன் காயமின்றி தப்பியது பெரும் அதிர்ஷ்டம் என அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
