மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் தாய்மையே தலைகுனிய வைக்கும் ஒரு கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இரண்டரை வயதே ஆன மஞ்சிதா என்ற பிஞ்சு குழந்தை, கடந்த 10-ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தது. ஆரம்பத்தில் இது ஒரு இயற்கை மரணம் என அனைவரும் நினைத்த நிலையில், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அந்தக் குழந்தை கழுத்து நெரிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தியபோதுதான், அந்தக் குழந்தையின் தாயே எமனாக மாறிய அதிர்ச்சித் தகவல் அம்பலமானது.
குழந்தையின் தாய் சங்கீதாவிடம் போலீஸார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். “குழந்தை அழுதுகொண்டே இருந்து தன்னைத் தொந்தரவு செய்ததால், ஆத்திரத்தில் தனது கைக்குட்டையாலேயே குழந்தையின் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டதாக” அவர் அளித்துள்ள வாக்குமூலம் ஒட்டுமொத்தக் கிராமத்தையுமே உறைந்துபோகச் செய்துள்ளது. பசிக்காகவோ அல்லது வலி தாங்காமலோ அழுத அந்தக் குழந்தையின் குரலைத் தனது கைகளாலேயே ஒரு தாய் அடக்கிய இந்தக் கொடூரம், சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்தப் பெண் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
