கான்பூரில் சச்சின் ராஜ்புத் என்ற இளைஞர், தனது மனைவியைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு நேராகத் தானாகவே காவல் நிலையத்திற்கு வந்து சரணடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்களது திருமணம் வெறும் நான்கு மாதங்களுக்கு முன்புதான் காதல் திருமணமாக நடந்துள்ளது. தனது குடும்பத்தினர் எதிர்ப்பையும் மீறி ஸ்வேதா என்பவரைத் திருமணம் செய்த சச்சின், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு வந்துள்ளார். நேற்று இரவு அவர் திடீரென அறைக்குச் சென்றபோது, மனைவி வேறு இரு இளைஞர்களுடன் இருந்ததைக் கண்டு ஆத்திரமடைந்ததாகத் தெரிவித்துள்ளார். இந்த மோதல் கடைசியில் கொலையில் முடிந்து, அந்தப் பெண்ணின் உடல் போர்வையினால் சுற்றப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஜோடிக்கு இடையே கடந்த மூன்று ஆண்டுகளாகக் காதல் இருந்து வந்துள்ளது. ஸ்வேதாவின் குடும்பத்தினர் கொடுத்த புகாரால் சச்சின் ஏற்கனவே ஜெயிலுக்கும் போய் வந்துள்ளார். சிறையிலிருந்து வந்த பிறகும் காதலித்த பெண்ணையே கரம் பிடித்தார். ஆனால், திருமணத்திற்குப் பிறகு மனைவிக்கு மற்ற மாணவர்களுடன் தொடர்பு இருந்ததாகவும், அவர்களுக்குப் பணம் அனுப்பியதாகவும் சச்சின் குற்றம் சாட்டியுள்ளார். தன்னை அடித்து மிரட்டிய ஆத்திரத்தில் இந்தக் கொலையைச் செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். காதல், துரோகம், ஆத்திரம் என மூன்று ஆண்டுகளில் ஒரு அழகான காதல் கதை இப்படி ரத்தக் கறையோடு முடிவுக்கு வந்தது காண்போரைத் திடுக்கிட வைத்துள்ளது!
