விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டியைச் சேர்ந்த மாலதி என்ற பெண்மணி, 33 பவுன் நகை மோசடி தொடர்பாக ராம்குமார் என்பவர் மீது கடந்த 2023-ஆம் ஆண்டு புகார் அளித்திருந்தார். இந்த வழக்கின் அடிப்படையில் ராம்குமார் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்த வழக்கை வாபஸ் பெறுமாறு மாலதியை ஒரு கும்பல் மிரட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்குத் துணையாகச் செயல்பட்டதாக அப்போதைய காவல் ஆய்வாளர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணை நேரில் அழைத்து, புகாரைத் திரும்பப் பெறவில்லை என்றால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என காவல் ஆய்வாளர் மிரட்டியதாகத் தெரிகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் உயர்மட்ட அதிகாரிகளிடம் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது.
மேலும் விசாரணையில் ஆய்வாளர் சட்டவிரோதமாக மிரட்டல் விடுத்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் தற்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய அதிகாரியே குற்றவாளிகளுக்குச் சாதகமாகச் செயல்பட்டு மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
