காங்கிரஸ் கட்சியின் இளம்புயல் சச்சின் பைலட் இன்று சென்னை வந்திருந்தார். செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், “தமிழகத்தில் திமுக ஆட்சியில் காங்கிரஸ் பங்கு கேட்குமா?” என்ற கேள்வியைக் கணையாக வீசினார்கள். அதற்கு சற்றும் யோசிக்காமல் பதிலளித்த அவர், “தமிழ்நாட்டில் காங்கிரஸுக்கென்று தனித்துவமான வாக்கு வங்கி இருக்கிறது. அதனால், மற்ற கட்சிகள் எதிர்பார்ப்பதைப் போலவே காங்கிரஸ் தொண்டர்களும் நிர்வாகிகளும் ஆட்சியில் பங்கு கேட்கிறார்கள்” என்று கூறி, கூட்டணிக்குள் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.
இருந்தாலும், கூட்டணிக்கு எந்தச் சிக்கலும் வந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்த அவர், “பாஜகவை எதிர்க்க இப்போது மட்டுமல்ல, எப்போதும் திமுகவும் காங்கிரஸும் இணைந்தே செயல்படுவோம்” என்று கூறிச் சமாளித்தார். பங்கு கேட்பது என்பது காங்கிரஸின் உரிமை என்றாலும், தேர்தல் நேரத்தில் இது திமுக கூட்டணிக்குள் எந்த மாதிரியான அதிர்வுகளை உருவாக்கப் போகிறது என்பதுதான் இப்போது பெரிய விவாதமாக மாறியுள்ளது.
