ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் அருகே ஓடும் ரயில் மீது மர்ம நபர்கள் கல்வீசித் தாக்கியதில், பெண் உட்பட மூன்று பயணிகள் காயமடைந்தனர். இதுதொடர்பாக 14 வயதுடைய இரண்டு சிறுவர்களை ரயில்வே பாதுகாப்பு படையினர் (RPF) கைது செய்துள்ளனர்.
சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: குஜராத் மாநிலம் அகமதாபாத் (அசாவா) – இந்தூர் இடையே வீர்பூமி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் உதய்பூர் மாவட்டத்தில் உள்ள ஜெய்சமந்த் மற்றும் ஜாவர் மைன்ஸ் ரயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தது.
அப்போது, ரயில் தண்டவாளம் அருகே நின்றிருந்த சில இளைஞர்கள் திடீரென ஓடும் ரயிலை நோக்கி கற்களை வீசித் தாக்கினர். இந்தத் தாக்குதலில் ரயிலின் பொதுப் பெட்டியின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறின. இதில் பயணம் செய்த ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்கள் என மொத்தம் மூன்று பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
उदयपुर में चलती वीरभूमि एक्सप्रेस पर पत्थरबाजी हुई, जिसमें तीन यात्री घायल हुए और कोच के कांच टूट गए
◆ रेलवे सुरक्षा बल (RPF) ने दो नाबालिगों को डिटेन किया और मामला दर्ज कर जांच शुरू की
◆ घटना सरसिया फाटक के पास हुई, पहले भी इलाके में पथराव और सुरक्षा हादसे दर्ज हो चुके हैं… pic.twitter.com/1teJG1kapu
— News24 (@news24tvchannel) January 15, 2026
திடீர் கல்வீச்சால் ரயிலுக்குள் இருந்த பயணிகள் கடும் அதிர்ச்சியும் பீதியும் அடைந்தனர். உடனடியாக இதுகுறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உதய்பூர் ரயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
இச்சம்பவம் குறித்து உதய்பூர் ஆர்.பி.எஃப் ஆய்வாளர் சுரேந்திர சிங் கூறுகையில், “ரயில் மீது கல்வீசியது தொடர்பாக 14 வயதுடைய இரண்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது ரயில்வே சட்டத்தின் 153 மற்றும் 147 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். மேலும் ரயில்வே பாதையோரங்களில் விளையாட்டாக கல்வீசும் செயல்களில் ஈடுபட வேண்டாம் என பொதுமக்களுக்கு ரயில்வே துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
