ராஜஸ்தான் மாநிலத் தலைநகர் ஜெய்ப்பூரில், சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்கி வருமாறு கூறிய தாயை, அவரது மகனே அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெய்ப்பூர் கர்தானி பகுதியில் வசித்து வந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் லட்சுமண் சிங்கின் மனைவி சந்தோஷ் தேவி, தனது மகன் நவீனிடம் காலியான சிலிண்டருக்குப் பதிலாகப் புதிய சிலிண்டர் வாங்கி வருமாறு திங்கள்கிழமை காலை கூறியுள்ளார்.

இந்தச் சிறிய விஷயத்திற்காக ஆத்திரமடைந்த நவீன், தனது தாயை மிகக் கொடூரமாகத் தாக்கத் தொடங்கியுள்ளார். படுக்கையில் இருந்த தாயை அவர் சரமாரியாகக் குத்தியதில், சந்தோஷ் தேவி பலத்த காயமடைந்து உயிரிழந்தார். இந்தக் கொடூரத் தாக்குதலை நவீனின் தந்தை மற்றும் சகோதரிகள் தடுக்க முயன்றும், அவர் ஆவேசமாகக் காணப்பட்டதால் யாராலும் அவரை கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சி ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மதுப் பழக்கத்திற்கு அடிமையான நவீன், ஏற்கனவே தனது மனைவியைத் தாக்கிய வழக்கில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

புகாரின் அடிப்படையில் நவீனை உடனடியாகக் கைது செய்த காவல்துறையினர், அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த சந்தோஷ் தேவியின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அவரது சொந்த ஊரான ஹரியானாவிற்கு எடுத்துச் செல்லப்பட்டது.