புது தில்லியில் தற்போது நிலவி வரும் அபாயகரமான காற்று மாசு காரணமாக, உலகத் தரம் வாய்ந்த பேட்மிண்டன் வீரரும், நான்கு முறை உலக சாம்பியனுமான டென்மார்க்கின் அண்டர்ஸ் அண்டன்சன் ‘இந்திய ஓபன் 2026’ தொடரிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார்.

இது தொடர்பாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள அவர், தில்லியில் காற்றின் தரக் குறியீடு (AQI) 350-ஐத் தாண்டி மிக மோசமான நிலையில் இருப்பதைச் சுட்டிக்காட்டி, “பேட்மிண்டன் போட்டியை நடத்துவதற்கு இது தகுதியான இடமே அல்ல” எனத் தில்லியைச் சாடியுள்ளார்.

முதல்நிலை வீரர்கள் பங்கேற்க வேண்டிய கட்டாயத் தொடர் என்பதால், இதிலிருந்து விலகியதற்காக உலகப் பேட்மிண்டன் கூட்டமைப்பு (BWF) அவருக்கு 5,000 டாலர்கள் (சுமார் ரூ. 4.5 லட்சம்) அபராதம் விதித்துள்ளது. தில்லியில் நிலவும் பனிமூட்டம் மற்றும் நச்சுப் புகையால் தங்களது உடல்நலம் பாதிக்கப்படுவதாக ஏற்கனவே சில வீராங்கனைகள் புகார் தெரிவித்துள்ள நிலையில், அண்டன்சனின் இந்த முடிவு விளையாட்டுத் துறையில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.