வங்கதேசத்தில் நிலவி வரும் அரசியல் சூழல் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் காரணமாக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ரூ. 9.20 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரகுமானை விடுவிக்க பிசிசிஐ உத்தரவிட்டது.

இதற்குப் பதிலடியாக, வங்கதேச அரசு ஐபிஎல் போட்டிகளைத் தனது நாட்டில் ஒளிபரப்பத் தடை விதித்ததோடு, அடுத்த மாதம் (பிப். 7) இந்தியாவில் தொடங்கவுள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கத் தங்கள் நாட்டு வீரர்களை இந்தியாவுக்கு அனுப்பப் போவதில்லை எனத் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி, தங்களது போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என வங்கதேச கிரிக்கெட் வாரியம் விடுத்த கோரிக்கையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நிராகரித்துவிட்டது. ஏற்கனவே போட்டி அட்டவணைகள் இறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில், இந்தியாவுக்கு வராவிட்டால் புள்ளிகளை இழக்க நேரிடும் என ஐசிசி எச்சரித்துள்ளது.

எனினும், நேற்று நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகும், “தேசிய கண்ணியத்தையும் வீரர்களின் பாதுகாப்பையும் விட்டுக்கொடுத்து இந்தியா செல்ல மாட்டோம்” என்பதில் வங்கதேச வாரியம் பிடிவாதமாக இருப்பதால், உலகக் கோப்பைத் தொடரில் பெரும் சிக்கல் நீடிக்கிறது.