இந்திய கிரிக்கெட் அணியின் கலகலப்பான சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல், சமீபத்தில் ஒரு பேட்டியில் தனது வாழ்க்கை முறை மாற்றத்தைப் பற்றி உருக்கமாகப் பேசியுள்ளார். ஒரு காலத்தில் பார்ட்டி அனிமல் (Party Animal) என்று பெயரெடுத்த அவர், கடந்த நான்கு மாதங்களாக ஒரு சொட்டு மது கூட அருந்தாமல் மொத்தமாகத் தியாகம் செய்துவிட்டதாகக் கூறியுள்ளார். “அந்த 35 வருஷம் ஒரு பக்கம், இந்த நாலு மாசம் ஒரு பக்கம்.. இப்போதான் நான் நிஜமான வாழ்க்கையை வாழுற மாதிரி இருக்கு” என்று தனது மாற்றத்தால் கிடைத்த நிம்மதியை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

​தனது குடும்பப் பின்னணியால் வந்த இந்தப் பழக்கத்தை விடுவது எளிதாக இல்லை என்றாலும், மன உறுதியால் (Mindset) தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற பார்ட்டிகளில் கூட மதுவைத் தொடாமல் இருந்ததாக அவர் பெருமையுடன் கூறியுள்ளார். மேலும், ஆர்ஜே மெஹ்விஷ் உடன் இணைத்து பேசப்பட்ட செய்திகள் வெறும் வதந்தி என்றும், அவர்கள் வெறும் நண்பர்கள் தான் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். தற்போது தேசிய அணியில் இடம் கிடைக்காத நிலையில், கவுண்டி கிரிக்கெட் விளையாடி வரும் சாஹல், வரும் ஏப்ரல் மாதம் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காகக் களம் இறங்கத் தயாராகி வருகிறார்.