குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், தேவன்ஷ் (Devansh) என்ற 7 வயது சிறுவன் விளையாடிக்கொண்டிருந்தான். விளையாட்டாக அங்கிருந்த அபெக்ஷா ரித்விக் வைஷ்ணவ் (Apeksha Ritvik Vaishnav) என்பவரது வீட்டின் காலிங் பெல்லை அடித்துவிட்டு ஓடியுள்ளான். இதில் ஆத்திரமடைந்த அபெக்ஷா, அந்தச் சிறுவனைப் பிடித்து வாகன நிறுத்துமிடத்திற்குத் தரதரவென்று இழுத்துச் சென்று சரமாரியாகத் தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலில் சிறுவன் தேவன்ஷின் உடலில் காயங்களும் வீக்கமும் ஏற்பட்டுள்ளன.
இந்தக் கொடூரமான காட்சி அங்கிருந்த சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலானது. தன் குழந்தையை இப்படியொரு பெண் மிருகத்தனமாகத் தாக்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர். அந்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில், அபெக்ஷா ரித்விக் வைஷ்ணவ் என்பவரைப் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு சிறு குறும்புக்காகப் பிஞ்சு குழந்தையை இப்படியா சித்திரவதை செய்வது என்று பொதுமக்கள் கொந்தளித்துப் போயுள்ளனர்.
