பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் வங்கிகளுக்குத் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், பணப் பரிவர்த்தனைகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. ஏடிஎம் மையங்களில் தடையின்றி பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) பொங்கல் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து ஜனவரி 16-ல் மாட்டுப் பொங்கல், 17-ல் காணும் பொங்கல் என வரிசையாகப் பண்டிகைகள் வருகின்றன. இதையொட்டி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்குத் தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வங்கிகளைப் பொறுத்தவரை, ஜனவரி 15 (வியாழன்) பொங்கல் திருநாள் முதல் ஜனவரி 18 (ஞாயிறு) வரை எனத் தொடர்ந்து 4 நாட்கள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 15: பொங்கல் விடுமுறை
ஜனவரி 16: மாட்டுப் பொங்கல்
ஜனவரி 17: காணும் பொங்கல் / உழவர் திருநாள்
ஜனவரி 18: ஞாயிற்றுக்கிழமை
இந்தத் தொடர் விடுமுறையால் காசோலை பரிவர்த்தனைகள் மற்றும் வங்கி கிளைகள் மூலமான நேரடிப் பணப் பரிமாற்றங்கள் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நாளை மட்டுமே வங்கிகள் செயல்படும் என்பதால், வர்த்தகப் பிரமுகர்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் தங்களது வங்கி சார்ந்த பணிகளை முடிக்கத் தயாராகி வருகின்றனர். வங்கி விடுமுறைக்கு முன்னதாகவே தேவையான நிதி ஏற்பாடுகளைச் செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்திருந்தாலும், பண்டிகை காலங்களில் ரொக்கப் பணத்தின் தேவை அதிகமாகவே உள்ளது. ஏடிஎம் மையங்களில் பணம் விரைவாகத் தீர்ந்துவிட வாய்ப்புள்ளதால், அனைத்து மையங்களிலும் உடனுக்குடன் பணத்தை நிரப்ப வங்கி நிர்வாகங்கள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாடிக்கையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்துப் பேசிய வங்கி அதிகாரிகள், “பணத்தை நிரப்பும் தனியார் ஏஜென்சிகள் மூலம் ஏடிஎம்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, தட்டுப்பாடின்றி பணம் கிடைக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளனர்.
