மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து ஜபல்பூருக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு ரயிலில் பயணித்த சிவில் நீதிபதி நவ்நீத் சிங் யாதவ், மது அருந்திவிட்டு சக பெண் பயணியின் இருக்கை அருகே சிறுநீர் கழித்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுமட்டுமின்றி, சக பயணிகளுடன் தகராறில் ஈடுபட்ட அவர், தடுத்த டிக்கெட் பரிசோதகரிடமும் தனது அதிகாரத்தைக் காட்டி மிரட்டியுள்ளார்.
இந்த ஒழுங்கீனச் செயல் நிரூபிக்கப்பட்டதையடுத்து, கடந்த 2019-ஆம் ஆண்டு அவரைப் பணியிலிருந்து நீக்கி அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டார். இருப்பினும், இந்த வழக்கில் சாட்சிகள் பிறழ்ந்ததால் குற்றவியல் வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார். இதனை அடிப்படையாகக் கொண்டு, கடந்த 2025-ஆம் ஆண்டு மே மாதம் மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் அந்த நீதிபதியை மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அமர்வு, நீதிபதியின் இந்தச் செயல் மிகவும் அருவருப்பானது மற்றும் அதிர்ச்சியளிக்கக் கூடியது என்று கடும் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், அவரை மீண்டும் பணியில் அமர்த்திய உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்த நீதிபதிகள், இது குறித்து மாநில அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
