மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள இரும்பாடி பகுதியில் ஜீவானந்தம் என்பவர் நகை அடகு கடை நடத்தி வந்தார். அப்பகுதி மக்களிடம் நெருக்கமாக பழகி ஏலச்சீட்டு மற்றும் வட்டித் தொழில் செய்து வந்த அவர், சுமார் 300 சவரன் நகைகள் மற்றும் 15 லட்ச ரூபாய் சீட்டுப் பணத்தை மோசடி செய்துவிட்டு, கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பத்துடன் இரவோடு இரவாக தலைமறைவானார்.
பாதிக்கப்பட்ட மக்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரைத் தேடி வந்தனர். நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த ஜீவானந்தத்தின் குடும்பம், தற்போது பொங்கல் பரிசுத் தொகுப்பு வாங்குவதற்காக மீண்டும் ஊருக்கு வந்துள்ளனர். இதையறிந்த பாதிக்கப்பட்ட பொதுமக்கள், மோசடி செய்தவர்களை கையும் களவுமாக பிடிப்பதற்காக அங்கு ஒன்று திரண்டனர். அப்போது அங்கிருந்த ஜீவானந்தத்தின் தாயாரை பொதுமக்கள் முற்றுகையிட்டு, அவர் வந்த காரையும் சிறைபிடித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார், பாதிக்கப்பட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
8 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குடும்பம், வெறும் 3 ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசுக்காக ஆசைப்பட்டு வந்து மக்களிடம் சிக்கிய சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பேச்சாக உள்ளது.
