கடலூர் மாவட்டம் அருகேரி பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்பவர் நடத்தி வரும் உணவகத்திற்கு, திடீர்குப்பத்தைச் சேர்ந்த 7 இளைஞர்கள் மது போதையில் சாப்பிட வந்துள்ளனர். அவர்களிடம் ஊழியர் என்ன வேண்டும் என்று கேட்டபோது, “மனிதக் கறி வேண்டும்” எனக் கேட்டு வினோதமான முறையில் தகராறு செய்துள்ளனர். இதைத் தட்டிக்கேட்ட சமையல் மாஸ்டர் தமிழழகனை அந்த இளைஞர்கள் கடுமையாகத் தாக்கியதுடன், உணவகத்தில் இருந்த பாத்திரங்கள் மற்றும் பொருட்களை அடித்து உடைத்துச் சூறையாடியுள்ளனர். இதனால் அங்கிருந்த வாடிக்கையாளர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
இந்தத் தாக்குதலில் காயமடைந்த சமையல் மாஸ்டர் திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து உணவக உரிமையாளர் தினேஷ் அளித்த புகாரின் பேரில், பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கவியரசன், பிரசாந்த் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய மூன்று இளைஞர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள பிரகாஷ், பூமாலை உள்ளிட்ட மற்ற நான்கு பேரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். “மனிதக் கறி” கேட்ட இளைஞர்களின் இந்தச் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
