தருமபுரி மாவட்டம் இண்டூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் மச்சினிச்சியைத் தலையில் கல்லைப் போட்டுத் தாக்கி, அவர் உயிருடன் இருக்கும்போதே மண்ணைப் போட்டுப் புதைத்துக் கொன்ற கட்டிட மேஸ்திரியின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம், புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அனுமந்தன் (40). கட்டிட மேஸ்திரியான இவருக்கு முனியம்மாள் என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். முனியம்மாளின் தங்கை ராஜேஸ்வரி. இவர் அனுமந்தனின் தம்பி முறையுள்ள பிரபு என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். அக்கா, தங்கை இருவரது குடும்பங்களும் கடந்த 8 ஆண்டுகளாக ஒரே கிராமத்தில் வசித்து வந்தன.
இந்நிலையில், அக்கா கணவர் அனுமந்தனுக்கும், ராஜேஸ்வரிக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாகத் திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
சம்பவத்தன்று, தனிமையில் வருமாறு ராஜேஸ்வரியை அனுமந்தன் அழைத்துள்ளார். அதன்படி அங்கு சென்ற இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அனுமந்தன், ராஜேஸ்வரியைச் சரமாரியாகத் தாக்கியதுடன், அருகில் கிடந்த கல்லை எடுத்து அவரது தலையில் பலமாகப் போட்டுள்ளார்.
இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த ராஜேஸ்வரி இறந்துவிட்டதாக அனுமந்தன் கருதியுள்ளார். உடனே கொலையை மறைக்கத் திட்டமிட்ட அவர், அங்கிருந்த பள்ளத்தில் ராஜேஸ்வரியைத் தள்ளிவிட்டு, தான் ஓட்டி வந்த டிராக்டரில் இருந்த மண்ணை அவர் மீது கொட்டி உயிருடன் புதைத்துள்ளார்.
யாரும் பார்க்கவில்லை என்ற தைரியத்தில் அனுமந்தன் அங்கிருந்து கிளம்பினார். ஆனால், அருகில் இருந்த வயல்வெளியில் வேலை செய்துகொண்டிருந்த விவசாயிகள், தூரத்தில் ஏதோ அசம்பாவிதம் நடப்பதைக் கவனித்துள்ளனர். சந்தேகமடைந்த அவர்கள் அந்தப் பகுதிக்குச் சென்று பார்த்தபோது, பள்ளத்தில் அரைகுறையாக மண் கொட்டப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், ஜேசிபி இயந்திரம் மூலம் மண்ணைத் தோண்டியபோது ராஜேஸ்வரி சடலமாக மீட்கப்பட்டார். உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகத் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவாகி வீட்டில் பதுங்கியிருந்த அனுமந்தனை போலீஸார் சுற்றி வளைத்துக் கைது செய்தனர். கள்ளக்காதல் விவகாரத்தில் மச்சினிச்சியை உயிருடன் புதைத்துக் கொன்ற இச்சம்பவம் தருமபுரி மாவட்டத்தில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
