ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் BBLடி20 தொடரின் போது, பாகிஸ்தான் நட்சத்திர பேட்ஸ்மேன் பாபர் அசாம் குறித்து ஆஸ்திரேலிய ஜாம்பவான்கள் டேவிட் வார்னர் மற்றும் ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்த கருத்துக்கள் தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளன.
சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் வீடியோ ஒன்றில், வார்னர் மற்றும் கில்கிறிஸ்ட் இடையேயான உரையாடல் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டுடியோவில் நடந்த விவாதத்தின் போது, டேவிட் வார்னர், “கில்லி, பாபர் அசாம் ஏன் பிபிஎல் தொடருக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?” எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த ஆடம் கில்கிறிஸ்ட், “ஏனென்றால் ஆஸ்திரேலியர்களுக்கு டெஸ்ட் கிரிக்கெட் என்றால் மிகவும் பிடிக்கும். மூன்று வடிவங்களிலும் (T20, ODI, Test) டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் ஒரே வீரர் பாபர் அசாம் தான்,” என்று கிண்டலாகக் கூறினார். இதைக் கேட்ட மார்க் வா மற்றும் வார்னர் இருவரும் சிரித்தனர்.
கில்கிறிஸ்ட் நகைச்சுவைக்காக இதைச் சொல்லியிருந்தாலும், பாபர் அசாமின் டி20 ஆட்ட முறையை அவர் மறைமுகமாக அவமானப்படுத்திவிட்டதாக பாகிஸ்தான் ரசிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக, விராட் கோலியுடன் ஒப்பிடப்படும் பாபரை, சமூக வலைதளங்களில் பலரும் “போலி கோலி” என்று பதிவிட்டு கேலி செய்து வருவது இந்த விவாதத்தை மேலும் பெரிதாக்கியுள்ளது.
David Warner to Adam Gilchrist:
Gilly, what do you think why was Babar Azam picked in the BBL ?Gilly:
Because Australians love watching Test cricket, and Babar Azam is the only player who plays all three formats like Test cricket.Mark Waugh and Warner laughed pic.twitter.com/5JMJ6v9XDe
— Shah (@Shahhoon1) January 9, 2026
தற்போது பிபிஎல் தொடரில் பாபர் அசாம் சந்தித்து வரும் விமர்சனங்களுக்கு அவரது புள்ளிவிவரங்களே முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. அதாவது அவர் விளையாடிய இன்னிங்ஸ்கள்: 7, எடுத்த ரன்கள்: 145, சராசரி: 24.2, ஸ்ட்ரைக் ரேட்: 108.2, டாட் பால் சதவீதம்: 39.6%
டி20 கிரிக்கெட்டில் 108 என்ற ஸ்ட்ரைக் ரேட் என்பது மிகவும் குறைவானதாகக் கருதப்படுகிறது. ஏறத்தாழ 40 சதவீதப் பந்துகளில் அவர் ரன் எதுவும் எடுக்காதது (Dot balls), அவரது கிளாசிக்கல் பேட்டிங் பாணி வேகமான பிபிஎல் தொடருக்கு செட் ஆகுமா என்ற கேள்வியை முன்னாள் வீரர்கள் எழுப்பத் தூண்டியுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் 15,000 ரன்களுக்கு மேல் குவித்துள்ள பாபர் அசாம், கடந்த ஒரு தசாப்தமாக பாகிஸ்தான் அணியின் முதுகெலும்பாகத் திகழ்கிறார். 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் ஐசிசி-யின் சிறந்த ஒருநாள் வீரர் விருதை வென்றவர். மிக விரைவாக 5,000 ஒருநாள் ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
இருப்பினும், சமீபகாலமாக டி20 போட்டிகளில் அவரது மெதுவான ஆட்டம் விமர்சனத்திற்கு உள்ளாகி வரும் நிலையில், ஆஸ்திரேலிய ஜாம்பவான்களின் இந்த நேரடி கிண்டல் கிரிக்கெட் உலகில் பேசுபொருளாகியுள்ளது.
