இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி குஜராத் வதோதராவில் உள்ள கோடாம்பி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. ஆட்டத்தில் விறுவிறுப்பு ஒருபுறம் இருக்க, வர்ணனையாளர் அறையில் முன்னாள் வீரர்கள் இருவருக்கு இடையே வெடித்த ‘மொழிப் போர்’ சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
நியூசிலாந்து இன்னிங்ஸின் 11-வது ஓவரின் போது, நியூசிலாந்து தொடக்க ஆட்டக்காரர்கள் வலுவான நிலையில் இருந்தனர். அப்போது பந்துவீசிக் கொண்டிருந்த தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு, விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் இந்தியில் சில ஆலோசனைகளை வழங்கினார்.
இது குறித்து வர்ணனை செய்துகொண்டிருந்த இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன், “வாஷிங்டன் சுந்தருக்கு இந்தி அவ்வளவு சரளமாகத் தெரியாது. அதனால் கே.எல்.ராகுல் இந்தியில் கூறிய அறிவுரைகள் அவருக்கு சரியாகப் புரிந்திருக்காது,” என்று குறிப்பிட்டார்.
இதைக் கேட்டதும் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் குறுக்கிட்டு, “உங்களது கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. சுந்தரை நீங்கள் அளவுக்கு அதிகமாகப் பாதுகாக்க முயல்கிறீர்கள் என நினைக்கிறேன்,” என்றார்.
அதற்கு வருண் ஆரோன் சிரித்துக்கொண்டே, “நான் யாரையும் பாதுகாக்கவில்லை. வாஷிங்டனுக்கு உண்மையிலேயே இந்தி சரியாகத் தெரியாது. கே.எல்.ராகுல் அவருடன் தமிழில் பேசியிருக்கலாம். ஆங்கிலத்தில் பேசினால் எதிரணி வீரர்களுக்கும் புரிந்துவிடும் என்பதால், உள்ளூர் மொழியில் பேசுவதுதான் நல்லது” என விளக்கமளித்தார்.
ஆனால், விவாதம் அங்கோடு முடிவடையவில்லை. சஞ்சய் பங்கர் பேசுகையில், “தென்னிந்தியர்கள் பெரும்பாலும் தங்கள் பிராந்திய மொழிகளுக்கே முக்கியத்துவம் தருகிறார்கள். ஆனால் இந்தி இந்தியாவின் தேசிய மொழி என்பதால், அது மிகவும் முக்கியமான மொழி,” என்று ஒரு சர்ச்சைக்குரிய கருத்தைக் கூறினார். (குறிப்பு: இந்தியாவிற்கு தேசிய மொழி என்று எதுவும் இல்லை, அலுவல் மொழிகள் மட்டுமே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது).
நிலைமை மோசமாவதை உணர்ந்த மற்றொரு வர்ணனையாளர் ஜதின் சப்ரு, “கிரிக்கெட்டிற்கு என்று ஒரே ஒரு மொழிதான் உள்ளது, அது விளையாட்டு மட்டுமே” என்று கூறி இருவரையும் அமைதிப்படுத்தினார்.
— Drizzyat12Kennyat8 (@45kennyat7PM) January 11, 2026
இந்தப் போட்டியில் நியூசிலாந்து தொடக்க வீரர்களான டெவன் கான்வே மற்றும் ஹென்றி நிக்கோல்ஸ் அரைசதம் அடித்து மிரட்டினர். இருப்பினும், இளம் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவிற்கு திருப்புமுனையை ஏற்படுத்தினார். இச்செய்தி எழுதப்படும் வரை நியூசிலாந்து அணி 126 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
மேலும் மைதானத்தில் நடந்த போராட்டத்தை விட, வர்ணனை அறையில் நடந்த இந்த ‘மொழி விவாதம்’ தான் தற்போது கிரிக்கெட் ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.
