இந்திய கிரிக்கெட் அணியில் ராகுல் டிராவிட் மற்றும் ரவி சாஸ்திரி காலத்தில் நிலவிய அந்த இணக்கமான சூழல் இப்போது இல்லை என்பது போன்ற ஒரு காட்சி வதோதராவில் அரங்கேறியுள்ளது. அதாவது நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்காக வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த மூத்த வீரர் ரிஷப் பந்த், பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாகப் பந்து பட்டு காயமடைந்தார். அவர் வலியால் துடித்துக் கொண்டிருந்தபோது, மற்ற வீரர்கள் உதவிக்கு ஓடி வந்தனர்.
ஆனால், வலைப்பயிற்சிக்கு பின்னால் நின்றுகொண்டிருந்த தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், பிசிசிஐ முதன்மை தேர்வாளர் அஜித் அகர்கர் மற்றும் கேப்டன் சுப்மன் கில் ஆகியோர் பந்தின் வலியைப் பார்த்தும், அவரைப் புறக்கணித்துவிட்டுத் தங்கள் உரையாடலைத் தொடர்ந்துள்ளனர். இந்திய அணியின் ட்ரெஸ்ஸிங் ரூம் சூழல் எவ்வளவு இறுக்கமாக மாறியுள்ளது என்பதற்கு இந்த அலட்சியமான செயல் ஒரு சாட்சியாக அமைந்துள்ளதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
Heartbroken 💔 moments when Rishabh Pant injured and literally crying but our coach Gautam Gambhir and Shubhman Gill completely ignored him . pic.twitter.com/h55Wmd8ykQ
— Cricket Central (@CricketCentrl) January 10, 2026
ரிஷப் பந்தின் காயம் குறித்து பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. இருப்பினும், காயத்தின் தீவிரம் அதிகமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2026 டி20 உலகக் கோப்பைக்குத் தயாராகும் இந்த வேளையில், ரிஷப்புக்கு அடிக்கடி ஏற்படும் காயங்கள் அவரது எதிர்காலம் குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது கே.எல். ராகுல் முதன்மை விக்கெட் கீப்பராக இருப்பதால், முதல் போட்டிக்கு அவசர மாற்று வீரர் எவரும் அறிவிக்கப்படவில்லை. எனினும், அடுத்த இரண்டு ஒருநாள் போட்டிகளுக்கு, டி20 அணியில் உள்ள இஷான் கிஷன் அல்லது ஜித்தேஷ் சர்மா ஆகியோரில் ஒருவர் அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
ஜனவரி 18-ம் தேதி வரை நடைபெறும் இந்த ஒருநாள் தொடரைத் தொடர்ந்து, நியூசிலாந்துடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா விளையாட உள்ளது. 2026 ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக இரு அணிகளுக்கும் இது ஒரு முக்கியமான தொடராகக் கருதப்படுகிறது.
காயத்திலிருந்து மீண்டு அணியில் இடம் பிடிக்கப் போராடி வந்த ரிஷப் பந்திற்கு, இந்த விபத்தும் நிர்வாகத்தின் அணுகுமுறையும் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
