கர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்தில், அரசுப் பேருந்தில் ஏறிய பள்ளி மாணவிகளை முறையான நிறுத்தத்தில் இறக்கிவிட்ட பெண் நடத்துனரை, மாணவிகளின் பெற்றோர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கதக்-முண்டரகி சாலையில் உள்ள பாபநாசி சுங்கச்சாவடி அருகே இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வடமேற்கு கர்நாடக சாலைப் போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த அந்தப் பெண் நடத்துனர், அனுமதிக்கப்படாத இடத்தில் பேருந்தை நிறுத்தி மாணவிகளை ஏற்ற மறுத்ததோடு, ஆய்வு அதிகாரிகள் வந்தால் தனக்கு பணி இடைநீக்கம் மற்றும் சட்ட ரீதியான சிக்கல்கள் ஏற்படும் என்று விளக்கி அவர்களை இறக்கிவிட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மாணவிகளின் பெற்றோர், இருசக்கர வாகனத்தில் பேருந்தைத் துரத்திச் சென்று வழிமறித்து, நடத்துனரைத் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு கன்னத்தில் அறைந்து தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் நடத்துனர் பேருந்திலேயே மயங்கி விழுந்தார்.
Heated Clash Between Conductor and Passengers in Gadag; Woman Conductor Slapped Near Toll Gate
byu/Altruistic-Issue-887 inIndiaFreakoutDesi
இந்த சம்பவம் குறித்து கதக் நகர காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள பிரகாஷ் மற்றும் நீலப்பா ஆகியோரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், கடமையைச் செய்த பெண் ஊழியர் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்குப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பேருந்தில் இருந்த மற்ற பயணிகள் மற்றும் ஓட்டுநர் இந்த அநீதியைத் தடுத்து நிறுத்தாமல் மௌனமாக இருந்தது வேதனையளிப்பதாகப் பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். விதிகளைப் பின்பற்றிப் பணியாற்றும் ஊழியர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
