மத்திய மும்பை பகுதியில் 14 வயது பள்ளி மாணவன் ஒருவன், தனது வகுப்பில் பயிலும் 13 வயது மாணவனைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குடியிருப்புப் பகுதிக்கு அருகே உள்ள ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்துச் சென்று அந்த மாணவன் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்துப் பாதிக்கப்பட்ட மாணவன் தனது தாயிடம் முறையிட்டதை அடுத்து, உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இதே மாணவன் பாதிக்கப்பட்ட சிறுவனைப் பள்ளியின் கழிவறைக்கு அழைத்துச் சென்று பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய திடுக்கிடும் தகவலும் தற்போது தெரியவந்துள்ளது.
பயத்தின் காரணமாகத் தொடக்கத்தில் இச்சம்பவத்தை மறைத்த மாணவன், மீண்டும் அதே போன்ற முயற்சி நடந்தபோது துணிச்சலுடன் பெற்றோரிடம் தெரிவித்துள்ளான். இச்சம்பவம் குறித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பந்தப்பட்ட இருவருமே சிறுவர்கள் என்பதால் இந்த வழக்கை மிகவும் மென்மையான முறையில் கையாண்டு வருவதாகத் தெரிவித்த அதிகாரிகள், பாதிக்கப்பட்ட சிறுவனுக்குத் தேவையான மனநல ஆலோசனைகளை வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளனர். பள்ளி மாணவர்களிடையே அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
